Monday, December 03, 2007

அப்போ நீ தூங்கியிருப்ப !!!- சிறுகதை

தென்காசியில் இருந்து கொல்லம் ரயிலில் ஏறியிருந்தோம். பாரதி ரொம்ப சந்தோஷமா இருந்தான் , எனக்கு ஜன்னல் சீட்டு தான் வேண்டும் என்று அங்கே உட்கார்ந்திருந்த பெண்ணை எப்படியோ சரிக்கட்டி ஜன்னல் சீட்டை பிடித்தான்.


ரயிலில் பயணம் செய்வது இது தான் முதல் முறை அவனுக்கு,அதுவும் மீட்டர்கேஜ் ரயிலில் பயணம் செய்வது பற்றிய அவனின் ஆசைகளும்,எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாவதால் ரொம்பவே சந்தோசமாக இருந்தான்.


செங்கோட்டையில் ரயில் நின்ற போது 'அப்பா வடை வாங்கலாமா' என்றான்.நான் என் மனைவியை பார்த்தேன்,அவள் சிரித்தாள் , அதில் நாங்கள் மீட்டர்கேஜ் ரயில் பயணம் பற்றி பாரதிக்கு சொல்லியிருந்தது, 'செங்கோட்டையில்' சூடான வடை கிடைக்கும் என்றும்,'தென்மலையில்' பலாப்பழம் கிடைக்கும் என்றதையும் நினைவில் வைத்திருக்கிறான் உங்கள் பையன் என்ற அர்த்தம் பொதிந்திருந்தது..


ரயிலை விட்டு இறங்கி வடை வாங்கினோம், பருப்பு வடை தான் வேண்டுமென்றான்.இந்த ஸ்டேசனுக்கு அப்புறம் பகவதிபுரம் வரும் ,அதற்கு பின் மலையேற வேண்டும் என்று ரயில் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது.சில பேர் அவசர அவசரமாக அரிசி ஏற்றிக் கொண்டிருந்தார்கள்,பெரும்பாலும் இங்கே தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு ரயில் வழியாக தான் அரிசி கடத்துவார்கள்.தூரத்தில் ரயில் குடவுனில் அந்தக் கால கரி இஞ்சின் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது, அந்த ரயிலில் நான் சின்ன வயதில் ராமேசுவரம் போனது நினைவுக்கு வந்தது.


பாரதிக்கு ரயில் மிகவும் பிடிக்கும் , ஒவ்வொரு வருட பிறந்த நாளுக்கு எனக்கு ரயில் தான் வேண்டுமென்பான், புது ஆடையில் எல்லாம் அவனுக்கு விருப்பமே இருந்ததில்லை.ஜன்னல் சீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான். ஒவ்வொரு வளைவில் ரயில் திரும்பும் போதும் இஞ்சின் தெரிவதையும், கடைசிப் பெட்டி தெரிவதையும் அடிக்கடி எங்களிடம் காட்டி குதூகலித்தான்.எங்கள் பக்கத்திலிருந்த எல்லாரிடமும் எளிதாக பழகி விட்டான்.


சிறுவயதில் வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு இப்படித்தான் அப்பா அழைத்துப் போவோர்.ஊருக்கு போவது என்றால் நானும் பாரதி மாதிரி தான் , ரொம்ப குஷியாக விடுவேன். எனக்கும் ரயில் பயணம் பிடிக்கும்.ஜன்னல் சீட்டிற்க்காக அண்ணனிடமும், அக்காளிடம் சண்டைப் போட்டிருக்கிறேன்.

தென்காசியிலிருந்து மீட்டர் கேஜ் ரயிலில் கொல்லம் வரை போக வேண்டும் , கொல்லத்திலிருந்து பின் பிராட் கேஜ் ரயிலில் பெரும்பாலும் அம்மா ஊரான மங்களூர்க்கோ இல்லை அப்பா ஊரான கண்ணணூர்க்கோ போவோம்.


ரயில் பகவதிபுரம் அடைந்தது , அங்கே ரொம்ப நேரம் ரயில் காத்துக் கொண்டிருந்தது, 'அப்பா புனலூர் ட்ரெயின் வருதாப்பா ?' என்றுக் கேட்டான் பாரதி, எப்படி இவனுக்கு இதெல்லாம் நினைவிருக்கிறது, ஒரு வருடமாக திட்டம் போட்டு இப்போது தான் சொந்த ஊருக்கு போக வாய்ப்பு கிடைத்தது. அப்போதிலிருந்தே பாரதி என்னையும் சக்தியையும் நச்சரிக்க ஆரம்பித்து விட்டான்.நானும் அவனை தூங்க வைக்கும் போதெல்லாம் கதைக்கு பதிலாக என் சிறு வயது ரயில் பயணங்கள் பற்றியும்,மீட்டர்கேஜ் ரயில் பற்றியும் , வழியில் வரும் குகைகளை பற்றியும் சொன்னேன்.


சென்னையிலிருந்து எளிதாக மங்களூர் போயிருக்கலாம் தான் ,ஆனால் பாரதிக்கு
சென்னையின் அவசரமும், மின்சார ரயிலில் வேர்வை கசகசப்பில் பெசன்ட் நகர் போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கடக்கும் விமானத்தை ரசிப்பதிலோ பற்றுதல் இல்லை.அதனால் தான் தென்காசி வந்து அங்கிருந்து கொல்லம் போகிறோம். சக்தி கூட அலுத்துக் கொண்டாள் 'ஏன் இவ்வளவு ஊர் சுற்றனும் என்று, திருமணத்திற்கு பின் அவளை தேனிலவுக்கு இதே பாதையில், ரயிலில் ஆலப்புலா விற்க்கு கூட்டிச் செல்கிறேன் என சொல்லி கூட்டிபோகாதாதை அவள் மறந்திருக்கக் கூடும்.

Image Hosted by ImageShack.us


ரயில் தென்மலை அடைந்த போது 'அச்சி அச்சி முருக்கு, கோவில் பட்டி கடலை மிட்டாய் என்று ஒரு வயதான பெண்மணி கூடையோடு எங்கள் பெட்டியில் ஏறினாள் , எங்களை அவள் கடக்கும் போது நான் பாரதியை பார்த்தேன், அவன் தன் சட்டை பையிலிருந்து பணம் எடுத்து கடலைமிட்டாய் வாங்கினான், என் சேமிப்பு பழக்கம் அவனுக்குமிருந்தது.அந்த பெண் நான் இதே மாதிரி அப்பாவுடன் சிறு வயதில் போகும் போது பார்த்திருக்கிறேன்,இன்னுமா முருக்கு வித்துக் கொண்டிருக்கிறாள் இவள்...பாரதி எனக்கும் சக்திக்கும் கொடுத்து விட்டு ஜன்னலில் பார்வை பதித்தான்


சிறுவயதில் கொல்லத்திற்கு போகும் போது நானும் இப்படித் தான் கடக்கும் ஒவ்வொரு கூடையையும் நான் வெறித்து பார்ப்பதும்,அப்பா சைகையிலேயே வேண்டுமா எனக் கேட்டு வாங்கி கொடுத்ததும் நினைவில் வந்தது, என்னை சக்தி பார்த்துக் கொண்டிருந்தாள்.


மாலையாகியது ரயில் இப்போது 10 கிமீ வேகத்தில் ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தது, பாரத்திக்கு தூக்கம் வந்திருந்தது ஆனால் முதல் குகையை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்திரமாக இருந்தான், ரயில் குகையில் போகும் போது ,மஞ்சள் விளக்கு போடுவார்கள்,இளைஞர்கள் தங்கள் தைரியத்தை நிரூபிக்க படியிலேயே உட்கார்ந்திருப்பார்கள் எல்லாரும் கத்துவார்கள், ஊளையிடுவார்கள்.ராட்டினத்தில் சுற்றும் போது நமக்கு பயம் தெரியாமலிருக்க கத்துவோமே அதே போல்..


மெலிதான இருட்டு எங்களை சூழ்ந்துக் கொண்டிருந்தது,கேரளாவின் எல்லைக்குள் நுழைந்து விட்டோம் என்பதை ரப்பர் மரங்களும், பலா வாசனையும், எண்ணெய் வைத்து புட்டம் வரை ஜடை போட்ட பாலிடெக்கினிக் பெண்களும், ரயில் தண்டவாளத்திலேயே கட்டிப் போட்டிருக்கும் ஜெர்சி பசுக்களும் சொல்லியது.ரயில் ஒரு கலாச்சாரத்திலிருந்து இன்னொரு கலாச்சாரத்திற்கு எங்களை ஆடி அசைந்து அழைத்து சென்றுக் கொண்டிருந்தத.


'அந்த 6 நிமிச கொகை எப்போப்பா வரும் ' பாரதிக் கேட்டான், அவனுக்கு தூக்கம் இமைமுட்டியிருந்தது, இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும் நீ தூங்கு , வரும் போது எழுப்புகிறேன் என்றேன்.'இல்லப்பா தூக்கம் வரல' என்றான். ஒவ்வொரு விஷத்திலும் அவன் என்னை பிரதிபலிக்கிறான் என்று சக்தி சொன்னதை இன்று தான் முழுமையாக உணர்ந்தேன்.


என் மொபைலை உரிமையாக சட்டைப் பையிலிருந்து எடுத்து கேம் விளையாட ஆரம்பித்தான்.நன்கு இருட்டிவிட்டிருந்தது,பனிக்காற்று எங்கும் நிரம்பியிருந்தது.பாரதி தூங்கியிருந்தான்.கொஞ்ச நேரத்தில் லைட் போட்டார்கள் ,குகை வரப் போகிறது நான் பாரதியை எழுப்ப முற்பட்டேன்,சக்தி வேண்டாமென்று கையமர்த்தினாள்.


சக்தியின் அருகே இடம்மாறி அமர்ந்தேன். 'ஏன் அமைதியாவே இருக்க?' நான் கேட்டேன்.ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டினாள்.'உன்கிட்ட சொல்லிருக்கனா தெரியல, நான் ஒவ்வொரு தடவ கொல்லத்திலிருந்து ரயிலில் போகும் போதும் என் அப்பாவிடம் ஒரு கேள்விக் கேட்பேன், என் ரொம்ப நாள் சந்தேகம் அது ' என்று நிறுத்தினேன்


இப்போது சக்தி ஆர்வமாயிருந்தாள், அவளிடம் ஏற்கெனவே சொன்ன விஷயமிருந்தாலும் , நான் ஆர்வமமும்,சுவாரசியமாயும் சொல்வதை மற்றொருமுறை கேட்பதில் எப்போதும் விருப்பமிருந்தது அவளுக்கு.'என்ன சந்தேகம் என்றாள்

'அப்பா நாம இப்போ கொல்லத்திலிருந்து இந்த கண்ணூர் எக்ஸ்பிரஸ் ல கிளம்புற இதே நேரத்துல கண்ணூர்ல இருந்து ஒரு ட்ரயின் கிளம்பும்ல்லா, அப்போ இந்த ரெண்டு ட்ரயினும் எங்க சந்திக்கும் '

'அதுக்கு அப்பா என்ன சொன்னார்', அவளுக்கு என் சந்தேகத்துக்கு யோசித்து பதில் சொல்வதை விட அப்பா என்ன பதில் சொன்னார் என்பதைக் கேட்க ஆர்வமிருந்தது.


'அப்போ நீ தூங்கியிருப்ப' ன்னு சொன்னார்.சொல்லி விட்டு நான் சிரிக்க , சக்தியும் என்னுடன் சேர்ந்து கொண்டாள்.


Image Hosted by ImageShack.us

பாரதி முழித்து விட்டான்,எங்கள் ரயில் மலையேறி இறங்கி இப்போது கொல்லத்தை அடைந்திருந்தது.'அப்பா அந்த 6 நிமிச குகை போயிட்டாப்பா'
எனக்கும் சக்திக்கும் என்ன பதில் சொல்வது என தெரிய வில்லை,பாரதியின் கவனத்தை மாற்றும் முயற்சியில் இறங்கினோம்.


'அங்க பாரு அது தான் வெயிட்டிங் ரூம் , நாம இப்போ அங்க போய் வெயிட் பண்ணலாம்'.'அந்த பிளாட்பார்மல தான் கண்ணூர் எக்ஸ்பிரஸ் வருமா',இந்த மீட்டர் கேஜ் ட்ரெயின் இங்கேயே நிக்குமா,இல்ல போயிடுமா' இப்படியான அவன் சந்தேகங்களுக்கு நான் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன்.


சிவப்பு கட்டிடத்தின் வாசலில் இருந்து பெரிய கடிகாரம் மணி 7.45 எனக் காட்டியது.வெயிட்டிங் ரூமில் வட்டவடிவ மேசையில் அமர்ந்திருந்த அந்த ரயில்வே பணிப் பெண்மணியிடம் டிக்கெட் காட்டிவிட்டு சக்தியை இருக்கச் சொல்லி விட்டு சாப்பாடு வாங்க ஹோட்டல் போனேன்.


பாரதி இரைச்சலுடன் வந்து நிற்கும் ரயில்களை பார்த்துக்கொண்டே வந்தான், நிற்காமல் போகும் சில ரயில்களை பார்த்து 'ஏன்ப்பா கொல்லம் எவ்வள்ளவு பெரிய ஸ்டேசன் இங்க கூட இந்த ட்ரெயின்லாம் நிற்க மாட்டேங்கிறதே என்ன திமிர்' என்றான்.சிரித்துக் கொண்டே உனக்கு என்ன வேண்டும் சாப்பிட என்றேன்..அப்பா நீ ஸ்டேசனுக்கு வெளியே போய் எங்கேயோ புரோட்டாவும்,கடலைக்கறியும் சாப்பிட்டேன்னு சொன்னியே அங்கே போகலாம்'


பாரதி இரைச்சலுடன் வந்து நிற்கும் ரயில்களை பார்த்துக்கொண்டே வந்தான், நிற்காமல் போகும் சில ரயில்களை பார்த்து 'ஏன்ப்பா கொல்லம் எவ்வளவு பெரிய ஸ்டேசன் இங்க கூட இந்த ட்ரெயின்லாம் நிற்க மாட்டேங்கிறதே என்ன திமிர்' என்றான்.சிரித்துக் கொண்டே உனக்கு என்ன வேண்டும் சாப்பிட என்றேன்..அப்பா நீ ஸ்டேசனுக்கு வெளியே போய் எங்கேயோ புரோட்டாவும்,கடலைக்கறியும் சாப்பிட்டேன்னு சொன்னியே அங்கே போகலாம்'
அவனை நான் வாஞ்சையுடன் பார்த்தேன்.


இன்னும் இரண்டு மணி நேரம் இருப்பதால் வேற்ய் வழியில்லாமல் ஸ்டேஷனில் ஓடிக் கொண்டிருந்த டிவியின் திரும்ப திரும்ப போட்டுக் கொண்டிருந்த ஆலுக்காஸ் ஜீவல்லரி விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்.கண்ணூர் எக்ஸ்பிரஸ் பற்றிய அறிவிப்பு வந்தது.'அப்பா நம்ம ட்ரெயின் பற்றி சொல்றாங்க', பாரதி ஆர்வாமாயிருந்தான்.



எங்களுக்கு ஒதுக்கப் பட்ட சீட்டில் உட்கார்ந்தோம்,எதிரில் இருந்தவர் மனோரமா படித்துக் கொண்டிருந்தார். காபி,பால்,சம்பாரம்(மோர்) விற்பவர்கள் அடிக்கடி கடந்துக் கொண்டிருந்தார்கள்.பாரதி எதிரில் இருந்த குழந்தையிடம் உனக்கு எந்த சீட்டு என்றுக் கேட்டான்..அந்த குழந்தை 'அச்சா' என சொல்லி பயந்துக் கொண்டு அப்பா மடியில் புதைந்துக் கொண்டது.


பாரதி ஜன்னல் வழியாக இருட்டை பார்த்துக் கொண்டே வந்தான்,'அப்பா நீ சொன்னியே ஒரு பாலத்துல ட்ரெயின் விழுந்ததுன்னு, அது வந்துட்டா' என்றான்.இன்னும் பத்தி நிமிஷத்துல வந்துடும் என்றேன்.சக்திக்கு தூக்கம் வந்திருக்க வேண்டும்,பேகிலிருந்து போர்வை எல்லாம் எடுத்து தூக்கத் தயாராயிருந்தாள்.


அப்போது தான் நான் பாரதியைக் கேட்டேன்,'ஆமா உன்கிட்ட ஒண்ணுக் கேட்கிறேன், நம்ம ட்ரெயின் இப்போ இங்க கொல்லத்துல கிளம்புற அதே நேரத்துல கண்ணூர்ல இருந்து இன்னொரு கண்ணூர் எக்ஸ்பிரஸ் கிளம்பும்லா அப்போ இந்த ரெண்டு ட்ரெயினும் எப்போ சந்திக்கும்'.


சக்தி பாரதியின் பதிலுக்காக காத்திருந்தாள், நானும்.பாரதி சற்றும் யோசிக்காமல் சொன்னான் 'அப்பா அப்போ நீ தூங்கியிருப்ப'..

15 கருத்துக்கள்:

syed said...

போட்டோ எல்லாம் super
பாரதி,சக்தி எல்லாம் யாருடா?

SurveySan said...

நல்ல நரேஷன்.

ஆனா, ட்ரெயின் ஆக்ஸிடண்ட்ல இறந்தது யாரு? மூணு பேருமா?

k4karthik said...

//தென்காசியில் இருந்து //

இப்படி அரம்பிச்சதுக்காகவே என் ஓட்டு உங்களுக்கு தான்

k4karthik said...

//தென்காசியில் இருந்து//

இப்படி அரம்பிச்சதுக்காகவே என் ஓட்டு உங்களுக்கு தான்

பாச மலர் said...

ரயிலில் அவர்களோடு சேர்ந்து பயணம் செய்த உனர்வு..புகைப்படங்களும் நன்றாக இருந்தன..

naanal said...

நல்ல கதையாடல்...
சுட்டி பாரதியின் பதிலும் நல்லா இருக்கு....

கார்த்திக் பிரபு said...

naanal said...
நல்ல கதையாடல்...
சுட்டி பாரதியின் பதிலும் நல்லா இருக்கு....
//


நன்றி நாணல்

கார்த்திக் பிரபு said...

பாச மலர் said...
ரயிலில் அவர்களோடு சேர்ந்து பயணம் செய்த உனர்வு..புகைப்படங்களும் நன்றாக இருந்தன..
//

நன்றி பாசமலர்

G.Ragavan said...

நல்ல விவரிப்பு.அந்த தலைக்கறி பத்தி ரெண்டு வாட்டி இருக்கே. அதப் பாரு. படங்கள் ரொம்ப அழகா இருக்கு.

அரை பிளேடு said...

கதை கொஞ்சம் ரயில் பெட்டி மாதிரி நீளமாகவே இருக்கோ.

பாரதி அப்பா மாதிரியே பதில் சொல்வதால் அவன் அப்பாவோட மறு பிறவி என்பதுதான் கதையோட முடிச்சா.

//ஆனா, ட்ரெயின் ஆக்ஸிடண்ட்ல இறந்தது யாரு? மூணு பேருமா?
//

இரண்டு டிரெயினும் எங்கே சந்திக்கும் என்பதுதான் டிரெயின்கள் மோதிக்கொள்ளும் என்பதற்கான குறிப்பா.

Haranprasanna said...

நல்ல கதை.

கிருஷ்ணா said...

கதை நல்லா இருக்கு. நீங்க எங்கே . தென்காசியா ? செங்கோட்டையா ?

நான் தென்காசிதான்

Iniyal said...

karthi nalla irukku kathaiyum, pasumaiyana antha padangalum.
Chinna vayasu train ninaivugala kondu varuthu unga kathai.

Nithya-A.C.Palayam said...

நல்ல விவரிப்பு, ரொம்ப அழகா இருக்கு.

saravan said...

de pinnita...really it s like reading sujatha stuff....u have really narrated well..